செவ்வாய், 10 டிசம்பர், 2013

வெள்ளை யானை கடிதமும் பதிலும்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு ,

வெள்ளை யானை படித்தாகிவிட்டது .அளந்து அளந்து , திருத்தி திருத்தி எழுதப்பட்ட சொற்கள் .
எய்டனின் , மூன்று முறை திருத்தப்பட்ட தகவலறிக்கை போல.

எய்டனின் தருக்கங்கள் ஒவுவொன்றிற்கும் , அதை விட வீரியமாய் துணை பாத்திரங்கள் (காத்தவராயன் , கருப்பன்,) மறு மொழி ஆற்றுகின்றனர் . 360 டிகிரி பார்வையை எய்டனுகும் வாசகனுக்கும் அளிக்கின்றன .

செங்கல்பட்டு வர்ணனைகள் , காட்சியை மட்டும் விவரித்து இருந்தால் இத்துணை வீரியம் வந்திருக்குமா என்று தெரியவில்லை , மாறாக எய்டனின் மனது மனித குமாரனிடமும், ஷெல்லி யிடமும் மன்றாடுகிறது , உள்ளம் உடைத்து அழும் தருணங்களில் எல்லாம் விசுவாசத்தையும் , வார்த்தைகளையும் போட்டு அப்பிக்கொள்கிறது .

இது ஆசிரியரின் , வாசகனின் தவிப்பு . இதை ரத்தமும் சதையுமாய் முதல் முறை , எழுதும் பொழுது கண்டிப்பாய் கடவுளின் மிக அருகாமையில் இருந்து இருப்பீர்கள் .

இன்று மனித அறம், உலகமயமாக்கப்பட்டு விட்டது . கிட்டதட்ட இதே நிகழ்வுகள் , மிக சமீபத்தில் , நம் அருகாமையில் , நம் ஈழ மக்களுக்கு நடந்தது . மிக சொற்பமாய் , மிக மொண்ணையாய் , மிக தாமதமாய் நமக்கு அற சீற்றம் உண்டானது. வாய்க்கரிசி அரசியலை வேடிக்கை பார்த்தே நமக்கு பழக்க பட்டு விட்டது .

நன்றி ,

சிவக்குமார்

அன்புள்ள சிவக்குமார்

எந்தக்காலத்திலும் வாழ்க்கைக்கான போட்டியே வரலாற்றைத்தீர்மானித்திருக்கிறது. ஒரு சகமனிதனின் மரணம்கூட நல்லவேளை நான் உயிருடனிருக்கிறேன் என்ற நிம்மதியையே மனிதனிடம் உருவாக்குகிறது. அதை வென்று தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் அறம் என்பதற்காகவே இலக்கியமும் கலையும் ஆன்மீகமும் நிரந்தரமாகப் போரிடுகின்றன என்று நான் நினைக்கிறேன்

ஜெ

http://www.jeyamohan.in/?p=42467

வியாழன், 21 நவம்பர், 2013

ஊமையின் உயிர் வலி


இந்திய   ஞான மரபு   "மௌனமாய் இருப்பதை " , ஞானத்தின் முதற்  படியாய் போதிக்கிறது  . "பேச்சு அற" , "நினைவு துற" , "சுயம் விட்டு வெளியேறு ", "இயற்கையாய்  இரு "  , "கூடு  விடு" ,  "இறையாய் இணை",  இது எல்லாம் இந்திய  ஞான மரபின் பல்வேறு படிகள் . கடவுளர்களின்  குருவான   தக்சிணா மூர்த்தி   , தன்  சீடர்களுக்கு  மௌன உபதேசம் செய்தார்  என்பதை நம் புராணங்கள் சொல்கின்றன .

மௌனமாகவே  எல்லாவற்றையும்  சொல்லிட முடியுமா ?
இது சாத்தியமா , வெறும் கட்டு கதையா , இது போன்ற கேள்விகளுக்கு
மிக சிறந்த  விடை ,  ரமண மகரிஷி பற்றி பால் பிரண்டன்  எழுதியது .
பல  ஆன்மிக கேள்விகளோடு  ரமணரை  சந்திக்க சென்ற அவரால் ஒரு கேள்வி கூட கேட்க முடிய வில்லை , மௌனமாகவே , ப்ரண்டோனின்  கேள்விகளுக்கு ,  ப்ரண்டோனின்  அகமே  விடை சொல்கிறது .  ரமணரை பற்றி  தன்  அனுபவத்தில் இவ்வாறு கூறுகிறார் பிரண்டன்

"ஒரு மனிதன் சும்மா உடகார்ந்திருக்கிறான். அவனை பார்த்தவர்கள் பரவசம் அடைகிறார்கள், கண்ணீர் விடுகிறார்கள், ஆழமான மனநகர்வு கொள்கிறார்கள். ஏன் என அவர்களுக்கு தெரிவதுமில்லை." .

பூரணமான  மனிதர்கள் , கலைஞர்கள் , ஞானிகள் ,  "மௌனத்தை கூட "
மொழியாய் , காட்சியாய், இசையாய் , ஞானமாய்  நமக்கு தந்து விடுகிறார்கள் . அவர்கள்  அதிகம் பேச வேண்டியது இல்லை , அவர்களின் மௌனம் கூட நமக்குள் மிக பெரிய மாற்றங்களை உண்டு செய்யும்  .

மௌனமாய் இருப்பது , " உணவு  இருந்தும்   நோன்பு இருப்பதை போல "
ஊமையாய்   இருப்பது  "  உணவில்லாமல் பட்டினி கிடப்பதற்கு சமானம் . 

" கையும் காலும் இல்லாத , வாய் பேச முடியா ஒருவன் ,  வெப்பமான பாறையின் மேல் உருகி வழியும்  வெண்ணெயை   பற்றி பிறர்க்கு  , சொல்லாலும்  ,  செய்கையாலும், விவரிக்க முடியாமால் , தன் மனதிற்குலே வைத்து  புழுங்குதல் போல ,  என் காதலை நான் எனக்குளே வைத்து புழுங்குகின்றேன் ". 

இடிக்கும் கேளிர்! நும்குறை யாக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன், தில்ல
ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய்,நோன்றுகொளற்கு அரிதே.

வெள்ளி வீதியார்  ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுதிய குறுந்தொகை .
"கையில் ஊமன் " (கை இல்லா ஊமை )  -  தன் உயிர் வலியை எப்படி  உணர்த்துவான் ?.உவமையின்  உச்சம் , இந்த இரண்டு வார்த்தைகள்  - "கையில் ஊமன் ".இரண்டே   வார்த்தைகளில்  , அந்த வலி வாசகனுக்கு   வந்து விடுகிறது .

சரி ,  இது மாதிரி இசையில் செய்ய முடியுமா ? வெளி வீதியார் இரண்டே வார்த்தைகளில் உணர்த்திய வலியை  , இசையில் செய்து விட முடியுமா ? "இசையில எதுக்கு சொல்லணும்   , வெறும்  ஒரே சத்தத்துல சொல்றேன் , அந்த ஊமையோட  வலிய"   , கேளுங்கனு ஒருத்தர் சொல்றார் .

இந்த  காட்சி துணுக்க  பாருங்க , சரியா  கேளுங்க . 
 தன் குழந்தையை  ரயில்ல  விட்டுட்டு  , ஒரு தாய் படுகிற   மரண அவஸ்தை . ரயில் சத்தத்துல  அழுதாலும் யாருக்கும் கேக்காது ,  ரயில பிடிக்கவும் முடியாது ,  "கையில் ஊமன்"   தான் இங்கயும் !,இது காட்சி .

 இந்த வலியை  இசையில சொல்லணும் ,
"1.00" வது -"1.12"  வது நிமிடம் வரை    கேளுங்க  , ரயில் போற சத்தம் போலவும் , மயில் அகவுற சத்தம் போலவும்   , ஆனா  அது  12  நொடில, அந்த கையில் ஊமன் படுகிற  வலிய  ஒரே ஒரு சத்தத்துல நமக்கு சேர்கிறது . கேட்கிறவர்களின்  உயிரை பிசைகிறது

பாட்டு, இசை எல்லாம் இந்த சத்தத்துக்கு முன்னாடி குறைவா  தான் இருக்கு.  தெரிஞ்சு வச்சாங்களா , தெரியாம வெச்சாங்கள  , இவருக்கு இசை ஞானின்னு சொல்லிட்டு ? ,  அட  போங்கயா , மியூசிக்  தம்பிகளா    போய் "இசை எங்கிருந்து வருகிறது " சொல்ற வடிவேலு comedyaa  பாருங்க !!!

திங்கள், 11 நவம்பர், 2013

 

 

விஷ்ணுபுரம் கடிதம்

விஷ்ணுபுரம் பற்றிய எனது புரிதலும் , திரு ஜெயமோகன் அவர்களின்  பதிலும்  

 

அன்புள்ள ஜெமோ ,
இன்று தான் விஷ்ணுபுரம் முடித்தேன் , பல நாள் முயன்று , கொஞ்சம் கொஞ்சமாய் “நாக ஹஸ்தி” யை போல், இதனை செரிக்க பழகிக் கொள்கிறேன் .கவித்துவம், தர்க்கம், இலக்கியம்,உன்மத்தம் எல்லாம் இழைந்த நிழல் அடுக்கு சொற்ப கணங்களில் எல்லாம் நிலைகுலைந்து இருள் அடர்ந்த “சூனியத்தில் ” தள்ளி விடுகிறது விஷ்ணுபுரம் .அனைத்து கதை மாந்தர்களும், வாசகன் உள்பட ஒரு பிரளயத்தில் சிக்கி கொள்கிறனர் .கவித்துவம், தர்க்கம், இலக்கியம்,உன்மத்தம் இதில் ஒன்றையேனும் உச்சதில் தொட்ட ஒரு பாத்திரம், சூனியத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு , சூனியத்தில் நில்லாமல், அதன் நேர் எதிர் திசையில் மற்றும் ஒரு தரிசனத்திற்குள் தன்னை புகுத்தி கொள்கிறது (புகுத்தி கொள்ள விழைகிறது).
சுடுகாட்டு சித்தனையும் , குழந்தையும் கண்டு மனம் களிக்கிறது .ஏனோ மனம் ரமணரை ஞாபக படுத்துகிறது.
ஆனால் சூனியம் கூட தனக்கான வாரிசாகக் குழந்தையை விட்டுச்செல்கிறது .
எத்தனை நியதிகள், தர்க்கங்கள்,வாழ்க்கைகள், அவரவர்க்கான நியாய தர்மங்கள் .
எங்கள் ஊர் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப்பெருமாள் , வரத ஹஸ்ததில் “மாசுச” என்று பொறிக்க பட்டிருக்கும். கீதையில் வரும் “மோக்ஷ சயாமி மாசுச”(“எல்லா தர்ம நியாயங்களையும் விட்டு என்னைச் சரணடைக “) , என்பதே விஷ்ணுபுரத்தின் திறவு கோல் . வரதனின் கையில் உள்ளதும் அதுவே . இன்னும் உணர்ந்து/திறந்து கொள்ள வேண்டும்
நன்றி ,
சிவகுமார்

அன்புள்ள சிவக்குமார்,
இன்று விஷ்ணுபுரம் பற்றி நினைக்கையில் ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது – அலகில் கொள்ளுவதைத்தான் கொத்த வேண்டும்.
விஷ்ணுபுரத்தின் ஞானதாகிகள் மனித மனதால் கொள்ள முடியாதவற்றை தேடினார்கள். சிக்கிக் கொண்ட பின் அலகுக்கு தக்க அதை வெட்டிக்கொண்டார்கள் என்று தோன்றுகிறது
எனக்கு வயதானதனால் வந்த ஞானமாக இருக்கலாம்
ஜெ

http://www.jeyamohan.in/?p=36898

 

ஞாயிறு, 17 ஜூலை, 2011

Black Swan - உணர்வின் பூரண ஆகுதி !



"What You Think , You become" - Buddha




உணர்வின் பூரணம் (Perfection ) என்பது காலம், நிலை மறந்து "தான் "அது" வாதல்" . விளங்ககொன்ன இந்த பூரணத்தை ,பேசா பொருளை , படமாக்க முடியுமா ! , முடிந்தால் பார்வையாளனுக்கு இந்த பூரணத்தின் ஒரு விழுக்காடேனும் கிட்டுமா ?
கிட்டும் ! அந்த உன்னத பெரு முயற்சியே "Black swan " !

ரஷ்ய நாட்டார் கதையான " Lake of swans " ய் தழுவி இயக்கப்பட இந்த திரைப்படம் , பார்ப்பவரை வியப்பிலும் ,பரவசத்திலும் ஆழ்த்துகிறது !


ஒரு சாபத்தின் விளைவால் இளவரசி வெண் அன்னமாய்
உரு மாறி , தன் காதலனை தேடி செல்ல, நடுவே ஒரு வஞ்சக கரு அன்னம் , தன் கபடத்தால் , வெண் அன்னத்தையும் அதன் காதலனையும் பிரிக்கின்றது .கள்ளமற்ற வெண் அன்னம் , தன் காதலை நிரூபிக்க தன்னயே அழித்து கொள்கிறது ! . இந்த நாட்டார் கதை ஒரு செவ்வியல் தன்மையுடன் , "Ballet " நாட்டிய பின்ணணியில் அமைந்த ஒரு நாட்டிய நாடகம்.


இந்த வெண் அன்னம் , கருப்பு அன்னம் ஆகிய இரு வேறு பாத்திரங்களை ஒரே பெண் ஏற்று நடித்தால் , அவள் அந்த கதா பாத்திரங்கலாகவே மாறிவிட்டால் !,அவளுக்குள் நடக்கும் மன போராட்டங்களே "Black Swan ". சமீபத்தில் வந்த படங்களில் இவ்வளவு , சிக்கலான கதையையும் , இத்துணை நேர்த்தியான திரை கதையையும் , பிரமிப்பூட்டும் நடிப்பையும் கண்டதில்லை .

"Nina " வாக நடித்திருக்கும் Natalie தன் சிறகுகளால் இந்த மொத்த படத்தின் கருவை தாங்குகிறாள்.

"Ballet " நடனத்திர்க்காகவே தன் வாழ்வை அற்பணிக்கிறாள் "Nina ".அவள் லட்சியம் எப்படியாவது இந்த "White SWAN " மற்றும் "BLACK SWAN " பாத்திரங்களை ஏற்பது . நளினமும் , பெண்மையும் , கொண்ட அவளால் "White SWAN " பாத்திரத்தை மிக சிறப்பாய் நடிக்க முடிக்கிறது ! ஒழுங்கீனமும் ,கபடமும் கொண்ட " BLACK SWAN " பாத்திரத்தை அவளால் செய்யவே முடிவதில்லை !

இந்த கபடமும் , ஒழுங்கீனமும் அவள் வாழ்வில் குடி புகுந்தால், எது கதாபத்திரம் எது தன் சுயம் என பிரிக்க முடியாத கையறு நிலை நேர்ந்தால் ! அது தான் "BLACK SWAN "! .

Natalie Portman க்கு விருது கொடுத்து தனக்கு புகழ் சேர்த்து கொண்டது "ஆஸ்கார்" . நியாயமாய் பார்த்தால் இதன் இயக்குனர், திரை கதையாளர் அனைவரும் விருதுக்கு உரியவர்கள்.
கலையும் , கலைஞனும் ஒன்றாய் சங்கமிக்கும் தருணம் மிக அபூர்வம்.இன்றும் கூட "ஹிரண்ய வதம் " நாடகத்தில் வரும் நரசிம்ம வேடமிட்ட கலைஞர் ஒப்பனையின் போது , சம்பிரதாய திற்காக ஒரு திருஷ்டி பொட்டு வைத்து வருவார். இது தான் இன்னும் தரையில் தான் இருக்கிறோம் என்று அவருக்கு அவரே போட்டு கொண்ட விலங்கு !. எல்லா இலக்கிய வாதிகளும் இது பற்றி ஒரு கதையெனும் எழுதி இருப்பார்கள் . மரணத்தை பற்றி ஒரு இசை கோர்வை எழுதியதாலேயே மொசார்ட் நோய் பட்டு இறந்தார் என்றும் , மரணத்தை பற்றி ஒரு ஆசு கவி பாடியதாலேயே மகாகவி காளிதாஸ் இறந்தார் என்றம் கூறுவர் ,இது சத்தியமாய் இருக்க அணைத்து சாத்தியங்களும் உள்ளன !



தன்னை வேள்வியில் ஆகுதியாகி அது வேறு தான் வேறு அல்லாமல்"தானே அது வாதல் " மிக சொற்பம் . தவத்தை விட இது மேல் ஆனது . "BLACK SWAN " அப்படி ஒரு ஆகுதி யையும் , அதன் முன்னே நடக்கும் மன போரட்டங்கள் பற்றிய படம். தவற விடாதீர் !

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

ஒளிக் கீற்று



இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்கெல்லாம்
அடங்கலும் தாமாய் நின்ற் றாடுகின்றாரே !

--- திருமூலர் (பத்தாம் திருமுறை - ஒன்பதாம் தந்திரம் - 15 - அற்புத கூத்து ).

மூளை - மனித உயிரின் எல்லா உள்கட்டமைப்பையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்யும் சர்வதிகாரி . மனம் என்னும் தங்க கருவூலத்தை கனத்த பூட்டிட்டு , அதன் சாவியை நம்மிடமே தரும் மாயாவி . அள்ளி பருகுவோர் அறிவாளியாகவும் , முங்கி முத்தெடுப்போர் ஞானி யாகவும் , மூச்சடைத்து இறப்போர் பித்தனாகவும் ஆக்க செய்யம் பூதம் .

நவீன அறிவியல் - இடப்பக்க மூளையை ஒரு serial processor ( X86 போல் ) ஆகவும் , வலப்பக்க மூளையை parallel processor ( graphics processor ) ஆகவும்
உருவகப்படுத்து கின்றது ( ஆக நம் மூளை ஒரு fusion Architecture - Thanks to AMD ) நம் மொழி திறன் , ஆளுமை , திறனாய்வு , பகுப்பறிதல் , சீரமைப்பு , கட்டுப்பாடு இவ் வனைத்திற்கும் நம் இடப்பக்க மூளையே காரணி , இதை முறையே Language Interpretation , Instruction Decoding , Arithmetic , Logic Control போன்ற செயல் களோடு ஒப்பிட்டு கொள்ளலாம் . இக்கணம் நாம் உணரும் , நுகரும் , துய்க்கும் அனைத்திற்கும் காரணி நம் வல ப்பக்க மூளை - கிட்ட தட்ட இது ஒரு image rendering செயல் .

மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த , நம் இந்திய மரபு - இதையே - அர்தநாரி தத்துவமாய் நம்மக்கு உபதேசி க்கின்றது . மொழி , ஆளுமை , நுண் உணர்வு போன்ற நம் இடப்பக்க மூளையின் செயல்களை பெண்ணாய் - சக்தியாய் உருவக படுத்துகிறது . இக்கணம் , இன் நொடி யின் செயல்களையே கடமையாய் கொண்ட வலப்பக்க மூளையை - ஆணாய் - சிவமாய் - இப்ப்ரபஜந்தின் நுழைவு வாயிலாய் - காட்டுகின்றது .


இதை ஒப்பு நோக்கும் விதமாய் , Jill Bolte Taylor என்னும் மூளை நரம்பியல் விஞ்ஞானி , இடப்பக்க மூளை செயல் இழந்ததன் விளைவாய் , தனக்கு ஏற்பட்ட "Out of Body experience" பற்றி விரிவாய் , சுவை பட கீழே காணும் கானொளியில் கதைக்கிறார்






முப்பதி ஏழு வயதான Taylor , ஒரு Harvard பட்டதாரி . எட்டு ஆண்டு களுக்கு முன் தனக்கு ஏற்பட்ட மூளை செயல் இழப்பும் , அதனால் தன்னுக்கு உண்டான , பிரபஞ்ச தொடர்பும் , நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன . மேலும் தகவல் அறிய Book: My Stroke of Insight
அவரை பொறுத்த வரை நாம் ஒவ்வொருவரும் , நம் வல பக்க மூளையால் , ஒருங்கிணைக்க பட்ட ஒளி கீற்றுகள் . நாம் ஒவ்வொருவரும் , நம் உள்ளகட்டமைபின் ஊடாய் , இப் பிரபஞ்ச சக்தியில் மூழ்கி முத்தெடுக்க முடியும் . நம் சைவ மரபோ இதையே , கடவுளாய் - சிவமாய் கற்பிக்கிறது . மாட்டு இடையனான திருமூலனோ Taylor சொல்வது போலே தன்னக்குள்ளே மூழ்கி , பிற உயிரில் தம்மை கண்டான் .


இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்கெல்லாம்
அடங்கலும் தாமாய் நின்ற் றாடுகின்றாரே !

எம் தந்தையாகிய சிவனது இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்ட, எம் தாயாகிய சத்தியும் அவளுக்குத் தனது இடப் பாகத்தைத் தந்த சிவனும் என ஒருவரே இருவராய் நின்று கூத்தியற்று கின்றார்கள்` என்பதை நானும் கருதலளவையால் உணர்ந்து கொண்டேன். ஆகவே, துணியால் பொதியப்பட்ட மூட்டை போல் ஆணவ மலத்தால் மறைக்கப் பட்டுள்ள அனைத்துயிர்களின் பொருட்டாகவே அவ்விருவரும், மாயா காரியங்கள் அனைத்திலும் நிறைந்து நின்று, அவைகளை இயக்கித் தாம் ஆடுகின்றனர்` எனப் பிறர்க்கும் உணர்த்துகின்றேன்


ஆக மொத்தம் நாம் ஒருவர் , நமக்குள் இருவர் !


-சிவகுமார்




ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

விரல் வழி கசியும் அமுதம் .


யானி - பெயர் சொல்லும் பொழுதே ஒரு உவகை ஊற்று உள்ளிருந்து ஓங்கி எழும்.
கிரீஸ் நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த இப் போராளி , தன் ஏழ்மையை , தன் சுற்றத்தை , தன் காதலை , தன் விதியை தோற்கடித்து , நம் நெஞ்சத்துள் நீங்கா நின்ற சாமுராய் .

படைப்புக்கான ஒரு பொறி தட்டியவுடன் , ஊன் , உயிர் , உறக்கம் , உற்றார் , உலகம் ஒரு பொருட்டல்லவென , தானும் , தன் இசையும் , அது ஸ்ருஷ்ட்டிக்கும் தன் உலகுமாய் வாழும் ஓர் தனிமை துறவி . ஆயிரம் முறை , தன் கோர்த்த இசையை , தானே சூடி , மாற்றி , பின் கோர்த்து , பின் மீண்டும் சூடி , திருப்தியளித்த பின் நமக்கு சூட்டும் ஒரு பேதை கோதை .

"Yaani in words" - வார்த்தைகளால் விவரிக்க முடியா இ ப் பிரபஞ்ச சக்தியை , விவரிக்க முனையும் ஒரு முயற்சி.
http://www.amazon.com/Yanni-Words/dp/1401351948
தன் மகிழ்வை , தன் காதலை , தன் கண்ணீரை , தன் ஆற்றாமையை இசையாய் மாற்றி, தன்னை சமைத்து , நமக்கு பரிமாறும் ஒரு சிறு குறிப்பு தொண்டன் .தன் கடல் கிராமம் , பூகம்பத்தால் களவாட பட்ட பிறகு , தன் ஆற்றாமையை , தன் கண்ணீரை , தன் வாழ்வின் நிச்சய மற்ற தன்மையை உணர்த்த வந்த செவ்வியல் படைப்பே "Acroyali-Standing In Motion"

தன் மனதில் கட்டிய வாத்திய வியூகங்களை சரி பார்த்த பின் , உலகின் தலை சிறந்த வாத்திய இசை வீரர்களை தன் படையில் சேர்க்கும் சக்கரவர்த்தி .


படையின் தளபதி - "SAMVEL YERVINYAN"

தீரா காதலை , உண்டாக்கிய இரு படைப்புகள் "The Storm" மற்றும் "Nostalgia" .





The Storm - எனும் இசை கோர்வையில் "சாமுவேல்" நிகழித்தியிருகும் ஓர் படையெடுப்பு மிக பிரம்மாணடம் . வயோலா போன்ற இசையை கருவியின் ஊடாய் மெல்ல ஒரு ஒற்றர் படையும் காலட் படையும் மெதுவாய் தன் வலிகளை அரற்றி கொண்டு செல்ல , இரண்டாம் நிமிடத்தில் தொடங்கும் சாமுவேலின் குதிரை படை , தன் நெடிய கூர் வாளால் நொடி பொழிதில், கேட்கும் அத்தனை பேரின் உள்ளங்களை வெட்டி வீழ்த்தி , நம்மை கள் வெறியர் ஆக்குகிறது . முடிவிலா இப்போரில் , மற்ற வீரர் களுக்கும் வாய்ப்பளித்து பின்னர் "thrumpet" போன்ற யானை படை பின் தொடர ,தன் சுழல் வாளால் , நானே இங்கு எல்லாம் என சொல்லும் ஒரு தருனம் படைப்பின் உச்சம்.


மற்றுமொரு மறக்கவொண்ணா படைப்பு "Prelude and Nostalgia ".
"Storm" - ஒரு குதிரை படை வாள் வீரனின் கள் வெறி யாட்டம் என்றால் , இதில் தோல்வி யுற்ற ஒரு சமரின் நீங்கா வலிகளை , மயிலிறகால் வருடி , "மீண்டும் விடியல் வரும்" , " இதுவும் கடந்து போகும்" என உணர்த்தும் ஒரு ஞான உபதேசம்.




"Duduk" எனும் ஒரு Aremenian கருவியின் ஊடாய் ஒரு புத்த பிட்ச்சு இறந்து கொண்டிருக்கும் உயிர்களுக்கெல்லாம் மோட்சம் வழங்குவது போல , மெல்ல மயிர் பீலியால் நம்மை வருடு கின்றது . பின் தொடங்கு கிறது "சாமுவேலின் " கதறல் . போரில் தோற்றதால் , தன்னை தானே அழித்து கொள்ள முனையும் ஒரு சாமுராயின் ஓலம் . வயிற்ரை அறைந்து கொண்டு ஒளமிடும் ஒப்பாரி ,
இவ்வோளத்தை கேட்கும் Duduk என்னும் புத்த பிச்சு , கண்ணீர் மல்கி , வீரனின் புண்களுக்கு மருந்திடுகின்றார் . பின்பு யானி தன் பியானோ வின் மூலம் , முடிவிலா இப் பிரபஞ்சத்தில் எல்லாம் கடந்து போகும் என விரல் வழி கசியும் அமுதத்தை அனைவர்க்கும் பொழிகின்றார்.

Nostalgia - நம் நினைவலைகளில் நீங்கா குமிழ்களை உருவாக்கி செல்கிறது .

வெளியே பெரும் நிசப்தம் !

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

உண்மத்தன்



உன் அருகாமையே , நீ தான் அவள் என உணர்த்திவிட ,
என் மன கசடுகள் அழிந்திடும் வேலையில் ,
உண்மத்தானாய் இடம் மறந்து , செயல் மறந்து ,
நானே நீயாய், நீயே நானாய் நின்ற இரு நொடி,
மீண்டும் இப் பூமி வந்து , இது கனவோ என மயங்கிடும் வேலையில் ,
இது கனவல்ல , இவள் அவளே என
தலையில் அடித்து சத்தியம் செய்தது கோவில் மணி ,
ஆம் மணி சொல்வது உண்மையே ,
அவளே இவள் என்ன வழிகாட்டி மரம் கை காட்ட ,
ஒட்டி கொண்டிருந்த கடைசி மன திரையும் விலகி உள்ளொளி பரவ
அங்கம் அங்கமாய் அழகு ,
என் நூற்றாண்டு பசிக்கு, இவளே உகந்தவள் என கண்டேன்
நர்த்தனம் , ஆலிங்கனம் , எல்லாம் என்னுல் நடந்தேறின
தேடி கண்டு கொண்டேன் , மனிதர் உணர்ந்து கொள்ளா காதலை !
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல !