செவ்வாய், 10 டிசம்பர், 2013

வெள்ளை யானை கடிதமும் பதிலும்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு ,

வெள்ளை யானை படித்தாகிவிட்டது .அளந்து அளந்து , திருத்தி திருத்தி எழுதப்பட்ட சொற்கள் .
எய்டனின் , மூன்று முறை திருத்தப்பட்ட தகவலறிக்கை போல.

எய்டனின் தருக்கங்கள் ஒவுவொன்றிற்கும் , அதை விட வீரியமாய் துணை பாத்திரங்கள் (காத்தவராயன் , கருப்பன்,) மறு மொழி ஆற்றுகின்றனர் . 360 டிகிரி பார்வையை எய்டனுகும் வாசகனுக்கும் அளிக்கின்றன .

செங்கல்பட்டு வர்ணனைகள் , காட்சியை மட்டும் விவரித்து இருந்தால் இத்துணை வீரியம் வந்திருக்குமா என்று தெரியவில்லை , மாறாக எய்டனின் மனது மனித குமாரனிடமும், ஷெல்லி யிடமும் மன்றாடுகிறது , உள்ளம் உடைத்து அழும் தருணங்களில் எல்லாம் விசுவாசத்தையும் , வார்த்தைகளையும் போட்டு அப்பிக்கொள்கிறது .

இது ஆசிரியரின் , வாசகனின் தவிப்பு . இதை ரத்தமும் சதையுமாய் முதல் முறை , எழுதும் பொழுது கண்டிப்பாய் கடவுளின் மிக அருகாமையில் இருந்து இருப்பீர்கள் .

இன்று மனித அறம், உலகமயமாக்கப்பட்டு விட்டது . கிட்டதட்ட இதே நிகழ்வுகள் , மிக சமீபத்தில் , நம் அருகாமையில் , நம் ஈழ மக்களுக்கு நடந்தது . மிக சொற்பமாய் , மிக மொண்ணையாய் , மிக தாமதமாய் நமக்கு அற சீற்றம் உண்டானது. வாய்க்கரிசி அரசியலை வேடிக்கை பார்த்தே நமக்கு பழக்க பட்டு விட்டது .

நன்றி ,

சிவக்குமார்

அன்புள்ள சிவக்குமார்

எந்தக்காலத்திலும் வாழ்க்கைக்கான போட்டியே வரலாற்றைத்தீர்மானித்திருக்கிறது. ஒரு சகமனிதனின் மரணம்கூட நல்லவேளை நான் உயிருடனிருக்கிறேன் என்ற நிம்மதியையே மனிதனிடம் உருவாக்குகிறது. அதை வென்று தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் அறம் என்பதற்காகவே இலக்கியமும் கலையும் ஆன்மீகமும் நிரந்தரமாகப் போரிடுகின்றன என்று நான் நினைக்கிறேன்

ஜெ

http://www.jeyamohan.in/?p=42467

வியாழன், 21 நவம்பர், 2013

ஊமையின் உயிர் வலி


இந்திய   ஞான மரபு   "மௌனமாய் இருப்பதை " , ஞானத்தின் முதற்  படியாய் போதிக்கிறது  . "பேச்சு அற" , "நினைவு துற" , "சுயம் விட்டு வெளியேறு ", "இயற்கையாய்  இரு "  , "கூடு  விடு" ,  "இறையாய் இணை",  இது எல்லாம் இந்திய  ஞான மரபின் பல்வேறு படிகள் . கடவுளர்களின்  குருவான   தக்சிணா மூர்த்தி   , தன்  சீடர்களுக்கு  மௌன உபதேசம் செய்தார்  என்பதை நம் புராணங்கள் சொல்கின்றன .

மௌனமாகவே  எல்லாவற்றையும்  சொல்லிட முடியுமா ?
இது சாத்தியமா , வெறும் கட்டு கதையா , இது போன்ற கேள்விகளுக்கு
மிக சிறந்த  விடை ,  ரமண மகரிஷி பற்றி பால் பிரண்டன்  எழுதியது .
பல  ஆன்மிக கேள்விகளோடு  ரமணரை  சந்திக்க சென்ற அவரால் ஒரு கேள்வி கூட கேட்க முடிய வில்லை , மௌனமாகவே , ப்ரண்டோனின்  கேள்விகளுக்கு ,  ப்ரண்டோனின்  அகமே  விடை சொல்கிறது .  ரமணரை பற்றி  தன்  அனுபவத்தில் இவ்வாறு கூறுகிறார் பிரண்டன்

"ஒரு மனிதன் சும்மா உடகார்ந்திருக்கிறான். அவனை பார்த்தவர்கள் பரவசம் அடைகிறார்கள், கண்ணீர் விடுகிறார்கள், ஆழமான மனநகர்வு கொள்கிறார்கள். ஏன் என அவர்களுக்கு தெரிவதுமில்லை." .

பூரணமான  மனிதர்கள் , கலைஞர்கள் , ஞானிகள் ,  "மௌனத்தை கூட "
மொழியாய் , காட்சியாய், இசையாய் , ஞானமாய்  நமக்கு தந்து விடுகிறார்கள் . அவர்கள்  அதிகம் பேச வேண்டியது இல்லை , அவர்களின் மௌனம் கூட நமக்குள் மிக பெரிய மாற்றங்களை உண்டு செய்யும்  .

மௌனமாய் இருப்பது , " உணவு  இருந்தும்   நோன்பு இருப்பதை போல "
ஊமையாய்   இருப்பது  "  உணவில்லாமல் பட்டினி கிடப்பதற்கு சமானம் . 

" கையும் காலும் இல்லாத , வாய் பேச முடியா ஒருவன் ,  வெப்பமான பாறையின் மேல் உருகி வழியும்  வெண்ணெயை   பற்றி பிறர்க்கு  , சொல்லாலும்  ,  செய்கையாலும், விவரிக்க முடியாமால் , தன் மனதிற்குலே வைத்து  புழுங்குதல் போல ,  என் காதலை நான் எனக்குளே வைத்து புழுங்குகின்றேன் ". 

இடிக்கும் கேளிர்! நும்குறை யாக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன், தில்ல
ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய்,நோன்றுகொளற்கு அரிதே.

வெள்ளி வீதியார்  ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுதிய குறுந்தொகை .
"கையில் ஊமன் " (கை இல்லா ஊமை )  -  தன் உயிர் வலியை எப்படி  உணர்த்துவான் ?.உவமையின்  உச்சம் , இந்த இரண்டு வார்த்தைகள்  - "கையில் ஊமன் ".இரண்டே   வார்த்தைகளில்  , அந்த வலி வாசகனுக்கு   வந்து விடுகிறது .

சரி ,  இது மாதிரி இசையில் செய்ய முடியுமா ? வெளி வீதியார் இரண்டே வார்த்தைகளில் உணர்த்திய வலியை  , இசையில் செய்து விட முடியுமா ? "இசையில எதுக்கு சொல்லணும்   , வெறும்  ஒரே சத்தத்துல சொல்றேன் , அந்த ஊமையோட  வலிய"   , கேளுங்கனு ஒருத்தர் சொல்றார் .

இந்த  காட்சி துணுக்க  பாருங்க , சரியா  கேளுங்க . 
 தன் குழந்தையை  ரயில்ல  விட்டுட்டு  , ஒரு தாய் படுகிற   மரண அவஸ்தை . ரயில் சத்தத்துல  அழுதாலும் யாருக்கும் கேக்காது ,  ரயில பிடிக்கவும் முடியாது ,  "கையில் ஊமன்"   தான் இங்கயும் !,இது காட்சி .

 இந்த வலியை  இசையில சொல்லணும் ,
"1.00" வது -"1.12"  வது நிமிடம் வரை    கேளுங்க  , ரயில் போற சத்தம் போலவும் , மயில் அகவுற சத்தம் போலவும்   , ஆனா  அது  12  நொடில, அந்த கையில் ஊமன் படுகிற  வலிய  ஒரே ஒரு சத்தத்துல நமக்கு சேர்கிறது . கேட்கிறவர்களின்  உயிரை பிசைகிறது

பாட்டு, இசை எல்லாம் இந்த சத்தத்துக்கு முன்னாடி குறைவா  தான் இருக்கு.  தெரிஞ்சு வச்சாங்களா , தெரியாம வெச்சாங்கள  , இவருக்கு இசை ஞானின்னு சொல்லிட்டு ? ,  அட  போங்கயா , மியூசிக்  தம்பிகளா    போய் "இசை எங்கிருந்து வருகிறது " சொல்ற வடிவேலு comedyaa  பாருங்க !!!

திங்கள், 11 நவம்பர், 2013

 

 

விஷ்ணுபுரம் கடிதம்

விஷ்ணுபுரம் பற்றிய எனது புரிதலும் , திரு ஜெயமோகன் அவர்களின்  பதிலும்  

 

அன்புள்ள ஜெமோ ,
இன்று தான் விஷ்ணுபுரம் முடித்தேன் , பல நாள் முயன்று , கொஞ்சம் கொஞ்சமாய் “நாக ஹஸ்தி” யை போல், இதனை செரிக்க பழகிக் கொள்கிறேன் .கவித்துவம், தர்க்கம், இலக்கியம்,உன்மத்தம் எல்லாம் இழைந்த நிழல் அடுக்கு சொற்ப கணங்களில் எல்லாம் நிலைகுலைந்து இருள் அடர்ந்த “சூனியத்தில் ” தள்ளி விடுகிறது விஷ்ணுபுரம் .அனைத்து கதை மாந்தர்களும், வாசகன் உள்பட ஒரு பிரளயத்தில் சிக்கி கொள்கிறனர் .கவித்துவம், தர்க்கம், இலக்கியம்,உன்மத்தம் இதில் ஒன்றையேனும் உச்சதில் தொட்ட ஒரு பாத்திரம், சூனியத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு , சூனியத்தில் நில்லாமல், அதன் நேர் எதிர் திசையில் மற்றும் ஒரு தரிசனத்திற்குள் தன்னை புகுத்தி கொள்கிறது (புகுத்தி கொள்ள விழைகிறது).
சுடுகாட்டு சித்தனையும் , குழந்தையும் கண்டு மனம் களிக்கிறது .ஏனோ மனம் ரமணரை ஞாபக படுத்துகிறது.
ஆனால் சூனியம் கூட தனக்கான வாரிசாகக் குழந்தையை விட்டுச்செல்கிறது .
எத்தனை நியதிகள், தர்க்கங்கள்,வாழ்க்கைகள், அவரவர்க்கான நியாய தர்மங்கள் .
எங்கள் ஊர் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப்பெருமாள் , வரத ஹஸ்ததில் “மாசுச” என்று பொறிக்க பட்டிருக்கும். கீதையில் வரும் “மோக்ஷ சயாமி மாசுச”(“எல்லா தர்ம நியாயங்களையும் விட்டு என்னைச் சரணடைக “) , என்பதே விஷ்ணுபுரத்தின் திறவு கோல் . வரதனின் கையில் உள்ளதும் அதுவே . இன்னும் உணர்ந்து/திறந்து கொள்ள வேண்டும்
நன்றி ,
சிவகுமார்

அன்புள்ள சிவக்குமார்,
இன்று விஷ்ணுபுரம் பற்றி நினைக்கையில் ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது – அலகில் கொள்ளுவதைத்தான் கொத்த வேண்டும்.
விஷ்ணுபுரத்தின் ஞானதாகிகள் மனித மனதால் கொள்ள முடியாதவற்றை தேடினார்கள். சிக்கிக் கொண்ட பின் அலகுக்கு தக்க அதை வெட்டிக்கொண்டார்கள் என்று தோன்றுகிறது
எனக்கு வயதானதனால் வந்த ஞானமாக இருக்கலாம்
ஜெ

http://www.jeyamohan.in/?p=36898