வியாழன், 21 நவம்பர், 2013

ஊமையின் உயிர் வலி


இந்திய   ஞான மரபு   "மௌனமாய் இருப்பதை " , ஞானத்தின் முதற்  படியாய் போதிக்கிறது  . "பேச்சு அற" , "நினைவு துற" , "சுயம் விட்டு வெளியேறு ", "இயற்கையாய்  இரு "  , "கூடு  விடு" ,  "இறையாய் இணை",  இது எல்லாம் இந்திய  ஞான மரபின் பல்வேறு படிகள் . கடவுளர்களின்  குருவான   தக்சிணா மூர்த்தி   , தன்  சீடர்களுக்கு  மௌன உபதேசம் செய்தார்  என்பதை நம் புராணங்கள் சொல்கின்றன .

மௌனமாகவே  எல்லாவற்றையும்  சொல்லிட முடியுமா ?
இது சாத்தியமா , வெறும் கட்டு கதையா , இது போன்ற கேள்விகளுக்கு
மிக சிறந்த  விடை ,  ரமண மகரிஷி பற்றி பால் பிரண்டன்  எழுதியது .
பல  ஆன்மிக கேள்விகளோடு  ரமணரை  சந்திக்க சென்ற அவரால் ஒரு கேள்வி கூட கேட்க முடிய வில்லை , மௌனமாகவே , ப்ரண்டோனின்  கேள்விகளுக்கு ,  ப்ரண்டோனின்  அகமே  விடை சொல்கிறது .  ரமணரை பற்றி  தன்  அனுபவத்தில் இவ்வாறு கூறுகிறார் பிரண்டன்

"ஒரு மனிதன் சும்மா உடகார்ந்திருக்கிறான். அவனை பார்த்தவர்கள் பரவசம் அடைகிறார்கள், கண்ணீர் விடுகிறார்கள், ஆழமான மனநகர்வு கொள்கிறார்கள். ஏன் என அவர்களுக்கு தெரிவதுமில்லை." .

பூரணமான  மனிதர்கள் , கலைஞர்கள் , ஞானிகள் ,  "மௌனத்தை கூட "
மொழியாய் , காட்சியாய், இசையாய் , ஞானமாய்  நமக்கு தந்து விடுகிறார்கள் . அவர்கள்  அதிகம் பேச வேண்டியது இல்லை , அவர்களின் மௌனம் கூட நமக்குள் மிக பெரிய மாற்றங்களை உண்டு செய்யும்  .

மௌனமாய் இருப்பது , " உணவு  இருந்தும்   நோன்பு இருப்பதை போல "
ஊமையாய்   இருப்பது  "  உணவில்லாமல் பட்டினி கிடப்பதற்கு சமானம் . 

" கையும் காலும் இல்லாத , வாய் பேச முடியா ஒருவன் ,  வெப்பமான பாறையின் மேல் உருகி வழியும்  வெண்ணெயை   பற்றி பிறர்க்கு  , சொல்லாலும்  ,  செய்கையாலும், விவரிக்க முடியாமால் , தன் மனதிற்குலே வைத்து  புழுங்குதல் போல ,  என் காதலை நான் எனக்குளே வைத்து புழுங்குகின்றேன் ". 

இடிக்கும் கேளிர்! நும்குறை யாக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன், தில்ல
ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய்,நோன்றுகொளற்கு அரிதே.

வெள்ளி வீதியார்  ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுதிய குறுந்தொகை .
"கையில் ஊமன் " (கை இல்லா ஊமை )  -  தன் உயிர் வலியை எப்படி  உணர்த்துவான் ?.உவமையின்  உச்சம் , இந்த இரண்டு வார்த்தைகள்  - "கையில் ஊமன் ".இரண்டே   வார்த்தைகளில்  , அந்த வலி வாசகனுக்கு   வந்து விடுகிறது .

சரி ,  இது மாதிரி இசையில் செய்ய முடியுமா ? வெளி வீதியார் இரண்டே வார்த்தைகளில் உணர்த்திய வலியை  , இசையில் செய்து விட முடியுமா ? "இசையில எதுக்கு சொல்லணும்   , வெறும்  ஒரே சத்தத்துல சொல்றேன் , அந்த ஊமையோட  வலிய"   , கேளுங்கனு ஒருத்தர் சொல்றார் .

இந்த  காட்சி துணுக்க  பாருங்க , சரியா  கேளுங்க . 
 தன் குழந்தையை  ரயில்ல  விட்டுட்டு  , ஒரு தாய் படுகிற   மரண அவஸ்தை . ரயில் சத்தத்துல  அழுதாலும் யாருக்கும் கேக்காது ,  ரயில பிடிக்கவும் முடியாது ,  "கையில் ஊமன்"   தான் இங்கயும் !,இது காட்சி .

 இந்த வலியை  இசையில சொல்லணும் ,
"1.00" வது -"1.12"  வது நிமிடம் வரை    கேளுங்க  , ரயில் போற சத்தம் போலவும் , மயில் அகவுற சத்தம் போலவும்   , ஆனா  அது  12  நொடில, அந்த கையில் ஊமன் படுகிற  வலிய  ஒரே ஒரு சத்தத்துல நமக்கு சேர்கிறது . கேட்கிறவர்களின்  உயிரை பிசைகிறது

பாட்டு, இசை எல்லாம் இந்த சத்தத்துக்கு முன்னாடி குறைவா  தான் இருக்கு.  தெரிஞ்சு வச்சாங்களா , தெரியாம வெச்சாங்கள  , இவருக்கு இசை ஞானின்னு சொல்லிட்டு ? ,  அட  போங்கயா , மியூசிக்  தம்பிகளா    போய் "இசை எங்கிருந்து வருகிறது " சொல்ற வடிவேலு comedyaa  பாருங்க !!!

5 கருத்துகள்:

  1. இந்திய ஞான மரபு - டூ - வடிவேலு. சூப்பர்.

    கையறு நிலை தெரியும். ஆனால், கையில்லாத ஊமைக்கு எல்லாமே கையறு நிலை தான் போலும்.

    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு