செவ்வாய், 10 டிசம்பர், 2013

வெள்ளை யானை கடிதமும் பதிலும்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு ,

வெள்ளை யானை படித்தாகிவிட்டது .அளந்து அளந்து , திருத்தி திருத்தி எழுதப்பட்ட சொற்கள் .
எய்டனின் , மூன்று முறை திருத்தப்பட்ட தகவலறிக்கை போல.

எய்டனின் தருக்கங்கள் ஒவுவொன்றிற்கும் , அதை விட வீரியமாய் துணை பாத்திரங்கள் (காத்தவராயன் , கருப்பன்,) மறு மொழி ஆற்றுகின்றனர் . 360 டிகிரி பார்வையை எய்டனுகும் வாசகனுக்கும் அளிக்கின்றன .

செங்கல்பட்டு வர்ணனைகள் , காட்சியை மட்டும் விவரித்து இருந்தால் இத்துணை வீரியம் வந்திருக்குமா என்று தெரியவில்லை , மாறாக எய்டனின் மனது மனித குமாரனிடமும், ஷெல்லி யிடமும் மன்றாடுகிறது , உள்ளம் உடைத்து அழும் தருணங்களில் எல்லாம் விசுவாசத்தையும் , வார்த்தைகளையும் போட்டு அப்பிக்கொள்கிறது .

இது ஆசிரியரின் , வாசகனின் தவிப்பு . இதை ரத்தமும் சதையுமாய் முதல் முறை , எழுதும் பொழுது கண்டிப்பாய் கடவுளின் மிக அருகாமையில் இருந்து இருப்பீர்கள் .

இன்று மனித அறம், உலகமயமாக்கப்பட்டு விட்டது . கிட்டதட்ட இதே நிகழ்வுகள் , மிக சமீபத்தில் , நம் அருகாமையில் , நம் ஈழ மக்களுக்கு நடந்தது . மிக சொற்பமாய் , மிக மொண்ணையாய் , மிக தாமதமாய் நமக்கு அற சீற்றம் உண்டானது. வாய்க்கரிசி அரசியலை வேடிக்கை பார்த்தே நமக்கு பழக்க பட்டு விட்டது .

நன்றி ,

சிவக்குமார்

அன்புள்ள சிவக்குமார்

எந்தக்காலத்திலும் வாழ்க்கைக்கான போட்டியே வரலாற்றைத்தீர்மானித்திருக்கிறது. ஒரு சகமனிதனின் மரணம்கூட நல்லவேளை நான் உயிருடனிருக்கிறேன் என்ற நிம்மதியையே மனிதனிடம் உருவாக்குகிறது. அதை வென்று தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் அறம் என்பதற்காகவே இலக்கியமும் கலையும் ஆன்மீகமும் நிரந்தரமாகப் போரிடுகின்றன என்று நான் நினைக்கிறேன்

ஜெ

http://www.jeyamohan.in/?p=42467

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக